.webp)

Colombo (News 1st) சமல் ராஜபக்ஸவின் மகன் ஷமீந்திர ராஜபக்ஸ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோரை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எயார்பஸ் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு எதிரான வழக்கு இன்று(02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மார்ச் 24ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் ஷமீந்திர ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக பிடியாணை பெறுவது அவசியம் என இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்திருந்தது.
பிடியாணை பெறுவதற்காக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அன்றைய தினம் நீதிமன்றத்திடம் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தது.
அன்றைய தினம் விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான், சந்தேகநபர்களுக்கு பிடியாணை பிறப்பிப்பதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவை இன்று வழங்குவதற்கு திகதி நிர்ணயித்திருந்தார்.
பிரதம நீதவான் இன்று தமது உத்தரவைப் பிறப்பித்து விசாரணை அதிகாரிகள் சந்தேகநபர்களை வெளிநாடுகளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
