பொலிஸாருக்கு 03 நாட்கள் விடுமுறை வழங்க ஆலோசனை

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மாதம் 03 நாட்கள் கட்டாயமாக விடுமுறை வழங்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

by Staff Writer 28-03-2026 | 12:11 PM

Colombo (News1st) - பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் 03 நாட்கள் கட்டாயமாக விடுமுறை வழங்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆளணி பற்றாக்குறை காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார்.

அத்துடன் அவர்களின் கடமை நேரமும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவியுயர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பதவியுயர்வுகளில் 50 வீதமான பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மீதமுள்ள 50 வீத பதவியுயர்வுகளை வழங்கும் நடவடிக்கைகளை இம்மாதத்துக்குள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக சலுகை விலையில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென இதன்போது அவர் உறுதியளித்துள்ளார்.