.webp)
-554983.jpg)
Colombo (News1st - நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒளி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் புதிய பிரதமராக முன்னாள் ரெப் பாடகரும், பொறியியலாளருமான பாலேந்திர ஷா நேற்று (27) பதவியேற்ற நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நேபாளத்தில் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுக்க தவறியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே முன்னாள் பிரதமர் கே. பி.சர்மா ஒளியும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கடந்த வாரத்தில் தனது தேர்தல் பிரசாரத்தின் போதும் புதிய பிரதமர் பாலேந்திர ஷா கருத்து வௌியிட்டிருந்தார்.
பாலேந்திர ஷா நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்று சில மணித்தியாலங்களிலேயே தீர்க்கமான முடிவுகளையும் அமைச்சரவை குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அரச சேவைகள் அனைத்தையும் 100 நாட்களில் டிஜிட்டல் மயமாக்கும் முதல் ஆவணத்தில் புதிய பிரதமர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழமையான அரசியல்வாதிகளுக்கு பதிலாக அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை அமைச்சர்களாக நியமிக்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
