.webp)

Colombo (News1st) - தற்போது நிலவும் கடும் வெப்பம் தொடர்ந்தும் அதிகரித்து செல்லுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்நாட்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில வருடங்களுக்கும் இதே நிலைமை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதிக வெப்பமான வானிலை நிலவும் போது பொதுமக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
பகல் நேரங்களில் திறந்த வௌிகளில் இருப்பதை தவிர்க்குமாறும் சூரிய ஔியில் நேரடியாக இருப்பதை குறைத்துக் கொள்ளுமாறும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பமான வானிலை மக்களிடையே உளவியல் ரீதியான குழப்ப நிலைமைகளை ஏற்படுத்தகூடுமென காலி கராபிட்டிய வைத்தியசாலையின் விசேட நிபுணர் ரூமி ருபென் (RUMI RUBEN) தெரிவித்துள்ளார்.
பொறுமையின்மை, கோபம், தீர்மானம் எடுக்க முடியாமை, சிந்திக்கும் திறன் பாதிப்பு உள்ளிட்ட விளைவுகளை இந்த வெப்பமான வானிலை ஏற்படுத்தகூடுமென அவர் சுட்டிக்காட்டினார்.
வெப்பமான வானிலையை தாங்கும் திறன் குறைந்தவர்கள் இவ்வாறான தாக்கங்களுக்கு அதிக அளவில் உட்படக்கூடுமென அவர் குறிப்பிட்டார்.
அதிக வெப்பமான வானிலைக்கு மத்தியில் தொடர்ச்சியாக திறந்த வௌியில் விளையாட்டுகளில் ஈடுபடுதல், நீர் அருந்தாமல் திறந்த வௌியில் நடமாடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளினால் சிறுவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி உள ரீதியாகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக காலி கராபிட்டிய வைத்தியசாலையின் விசேட நிபுணர் ரூமி ருபென் (RUMI RUBEN) மேலும் குறிப்பிட்டுள்ளார்.
