.webp)
-613154-554922.jpg)
Colombo (News1st) ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் ஈரான் மீதான தனது தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அமைதியை விரும்புவதாகவும் மேலும் உயிரிழப்புகளையும் அழிவுகளையும் அவர் விரும்பவில்லை என்றும் வௌ்ளை மாளிகையின் ஊடகப்பேச்சாளர் கெரோலின் லெவிட் கூறியுள்ளார்.
ஈரான் தற்போது இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போதைய சூழ்நிலையின் யதார்த்தத்தை ஏற்கத் தவறினால் முன்னெப்போதும் இல்லாதவாறு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிப்படுத்துவார் எனவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
வளைகுடா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் பரிசீலித்து வருவதாகவும் ஆனால், விரிவடைந்து வரும் மத்திய கிழக்கு மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை என்றும் ஈரான் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகளைப் பரிமாற்றிக்கொள்வது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளென குறிக்காது என ஈரான் வௌிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
ஈரானின் அரச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஊடாக அனுப்பப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பின் 15 அம்சத் திட்ட முன்மொழிவுகள் ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளை அகற்றுதல், செறிவூட்டலை நிறுத்துதல், அதன் பெலஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துவதாக இஸ்ரேல் அமைச்சரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் போரை நாடவில்லை என அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் நேர்காணலில் கூறியுள்ளார்.
ஈரான் மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும் ஏற்பட்ட அழிவுகளுக்கு இழப்பீட்டை கோருவதாகவும் அப்பாஸ் அரக்ச்சி வலியுறுத்தியுள்ளார்.
இராணுவப் பிரசன்னம் இருந்தபோதிலும் பிராந்திய நாடுகளைப் பாதுகாப்பதற்கு வொஷிங்டன் தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை எனவும் மாறாக எதிரிகளுக்கே மூடப்பட்டுள்ளதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழியை வழங்கி வருவதாகவும் ஈரான் மீண்டும் தெரிவித்துள்ளது.
இதனிடையே போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தருணம் வந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ள ஐ.நா செயலாளர் நாயகம் அண்டை நாடுகளைத் தாக்குவதை நிறுத்துமாறு ஈரானையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
