ரஷ்யாவிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க ரஷ்ய வலுசக்தி பிரதியமைச்சர் இணக்கம்

by Staff Writer 26-03-2026 | 8:01 PM

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க ரஷ்ய வலுசக்தி பிரதியமைச்சர் ரோமன் மார்ஷவின் இணங்கியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

ரிவி வன் தொலைக்காட்சியின் HAPPENING NOW நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திகுமார இதனைக் கூறினார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, QR குறியீட்டு முறைமைக்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகிலும் வாகனங்களுக்கான நீண்ட வரிசைகள் காணப்படவில்லை.

எதிர்வரும் மே மாதம் வரையில் நாட்டில் எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 35,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமார கூறினார்.

அத்துடன், எரிபொருளை ஏற்றிய மேலும் 2 கப்பல்கள் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு வருகை தரவுள்ளன.

இவற்றில் ஒரு கப்பலில்,  30,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் அடங்குவதுடன், 5000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக  பெட்ரோல் அடங்குவதாக மயுர நெத்திகுமார குறிப்பிட்டார். 

மற்றைய கப்பலில் 8000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளும் 32,000 மெட்ரிக் தொன் டீசலும் கொண்டுவரப்படவுள்ளதாக மயூர நெத்திக்குமார மேலும் தெரிவித்தார்.