.webp)

Colombo (News 1st) - 2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காக புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படுமென பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
ஒழுங்குமுறை அதிகாரசபையொன்றின் ஊடாக முன்பள்ளிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் நேற்று(15) நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் போது முன்பள்ளி ஆசிரியர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
முதலில் அனைத்து முன்பள்ளிகளும் முறையாக பதிவு செய்யப்பட வேண்டுமென தெரிவித்த பிரதமர் ஆசிரியர் பயிற்சிக்காக ஏற்கனவே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
முன்பள்ளி டிப்ளோமாவிற்காக அங்கீகரிக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இனிவரும் காலங்களில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை வழங்கப்படுமெனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தகைமைகளை வளர்க்கவும் அவர்களை ஒரு முறையான சம்பள படிமுறைக்குள் உள்வாங்கவும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
முன்பள்ளிகள் மாகாண சபைகளுக்கும் பிரதேச சபைகளுக்கும் உட்பட்டவை என்பதால் விடயப்பரப்பிற்கு பொறுப்பான அமைச்சு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியுமென்பதால் முன்பள்ளி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க கட்டமைப்பு குழுக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுக்கள் ஊடாக திட்டமிட்டு செயற்படுமாறு பிரதமர் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.
