நிதி தூய்தாக்கல் தடை சட்டத்தின் கீழ் பெண் கைது

நிதி தூய்தாக்கல் தடை சட்டத்தின் கீழ் மன்னாரில் பெண் கைது

by Staff Writer 16-03-2026 | 4:08 PM

Colombo (News 1st) - நிதி தூய்தாக்கல் தடை சட்டத்தின் கீழ் மன்னாரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

2019 முதல் 2023 வரையான காலப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தியமையினூடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

நபரொருவரால் முன்னெடுக்கப்பட்ட இந்த போதைப்பொருள் கடத்தலினூடாக ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் 02 மாடி வீடு, 05 கடைகளுக்கான அறைகளுடன் கூடிய வீடு, கார் மற்றும் 360 பவுண் தங்க நகை உள்ளிட்ட சொத்துக்கள் சேர்க்கப்பட்டமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த 02 மாடி வீடு மற்றும் கார் தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் பயன்பாடு மீது தடையுத்தரவை பெற்றுக்கொண்டு அதனை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தங்க நகைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது அவை சந்தேகநபரின் மனைவியின் தாயாரால் பல நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு மன்னாரிலுள்ள பல நிலையங்களில் அவை விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபரினால் சட்டவிரோத செயலினூடாக பெறப்பட்ட தங்க நகைகள் என அறிந்துகொண்டே அவற்றை அடகு வைத்தமை மற்றும் விற்பனை செய்தமையினூடாக நிதி தூய்தாக்கல் தடை சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து சந்தேகநபரின் மனைவியின் தாயார் மன்னாரில் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் முன்னெடுத்துவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.