சுரேஷ் சலேவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடியாக தொடர்பு : நீதிமன்றில் வெளிக்கொணர்வு

by Staff Writer 12-03-2026 | 6:48 AM

Colombo (News 1st) பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புடையவை என கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று(11) தெரிவித்தார்.

இந்த விடயங்கள் கடமை தவறியமை அல்லது வேறு விடயங்கள் சார்ந்தவை அல்லவென நீதவான் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போதே நீதவான் இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் சுரேஷ் சலேவின் தொடர்புகளை வெளிப்படுத்தும் சில விடயங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

கட்டுவாப்பிட்டி தேவாலயம் மீதான தாக்குதலை நடத்துவதற்காக சஹ்ரானின் குழுவினருக்கு தாக்குதலுக்கு முன்னதாக தகவல்களை சேகரித்துக் கொடுப்பதில் சுரேஷ் சலே நேரடியாக சம்பந்தப்பட்டு தனது தகவல் வழங்குநர் ஒருவரைப் பயன்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணை அதிகாரியின் விளக்கம்
மேற்கோள் ஆரம்பம்

‘’இந்த புலனாய்வு பிரிவினரால் பாணந்துறை பிரதேசத்தில் மற்றுமொரு தகவல் வழங்குநர் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்த தாக்குதல் இடம்பெறவுள்ளதாக அவர் முன்னரே அறிவித்திருந்தார். 

அவ்வாறு அறிவித்திருந்தும் தாக்குதல் நடந்த தினத்தன்று அவரிடம் வினவிய போது கௌரவ நீதவான் அவர்களே, இந்த தாக்குதலின் பின்னணியில் குறைந்தது 20 வருடங்களாவது இராணுவ அனுபவம் கொண்ட அதிகாரியொருவர் நிச்சயமாக இருக்கிறாரென அவர் தெரிவித்தார். இராணுவத்தின் உயரதிகாரிகள் தொலைபேசி ஊடாக அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதுடன் 2019 ஏப்ரல் 26ஆம் திகதி இந்த தகவல் வழங்குநர் இராணுவப் புலனாய்வு பிரிவினாலேயே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் அவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் அவரது வீட்டின் பராமரிப்பு பணிகளை இராணுவப் புலனாய்வு பிரிவினரே முன்னெடுத்து வந்தனர். அதேபோன்று அவரது மகனுக்கு இராணுவப் புலனாய்வு படையணியின் கணினி பிரிவில் வேலைவாய்ப்பை வழங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது கௌரவ நீதவான் அவர்களே''

மேற்கோள் நிறைவு

புலனாய்வு அதிகாரிக்கு ஒருவர் தகவல் வழங்குநரைப் பராமரிப்பதற்கான சட்டபூர்வ அதிகாரம் இருப்பதாக கோட்டை நீதவான் இதன்போது தெரிவித்தார்.

இருப்பினும் ஒரு குற்றத்தின் சந்தேகநபராக மாறிய பின்னரும் அவ்வாறு பராமரிக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளனவா என நீதவான் கேள்வி எழுப்பினார்.

சந்தேகநபராக மாறிய பின்னரும் அவ்வாறான பராமரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள   அதிகாரிகள் இதன்போது பதிலளித்தனர்.

இதில் முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்புபட்ட விதம் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

விசாரணை அதிகாரியின் விளக்கம்
மேற்கோள் ஆரம்பம்

‘’சந்தேகநபரின் வழிகாட்டலின் கீழேயே இவை அனைத்தும் நடந்துள்ளன. பின்னர் சட்ட மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார். பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த அந்த சந்தேகநபரை கலாதாரி ஹோட்டலுக்கு அழைத்து வந்து அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் இந்த விடயங்களில் இருந்து விலகியிருக்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது''

மேற்கோள் நிறைவு

எதற்காக அவ்வாறு நன்றி தெரிவிக்கப்பட்டது என நீதவான் இதன்போது வினவினார்.

விசாரணை அதிகாரியின் விளக்கம்
மேற்கோள் ஆரம்பம்

‘’அவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். ஒரு புலனாய்வு அதிகாரியை அவரிடம் அனுப்பி இந்த விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்த தகவல்களை அவர்கள் பெற்றுக்கொண்டனர். உள்ளே இருப்பவர்கள் எவ்வாறு CID-யிடம் வாக்குமூலம் அளிக்க வேண்டும் டி.ஐ.டி எவ்வாறு விசாரணைகளை நடத்துகிறது மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எவ்வாறு விசாரணை செய்கிறார்கள் என்பது குறித்த அனைத்து தகவல்களையும் ஒரு புலனாய்வு அதிகாரியை அனுப்பி அவர்கள் பெற்றுக்கொண்டனர் கௌரவ நீதவான் அவர்களே''

மேற்கோள் நிறைவு

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி இராஜேந்திரன் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துவதற்காக சுரேஷ் சலே மேற்கொண்ட தலையீடுகள் குறித்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று வெளிப்படுத்தியது.

விசாரணை அதிகாரியின் விளக்கம்

மேற்கோள் ஆரம்பம்

‘’கௌரவ நீதவான் அவர்களே, இந்த தாக்குதலின் பின்னர் 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. அங்கு சாரா ஜெஸ்மின் என்ற பெண் இருந்துள்ளார். அந்த பெண்ணின் சடலம் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. ஆனால் இந்த பெண் தற்கொலை குண்டுதாரி தொடர்பான மரபணு அறிக்கை மூன்றாவது முயற்சியிலேயே கண்டறியப்பட்டுள்ளது. மூன்றாவது முறை பரிசோதனையை முன்னெடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு இந்த சந்தேகநபரே பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்துள்ளார்''

மேற்கோள் நிறைவு

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் C.D.விக்கிரமரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நிஷாந்த சொய்சா ஆகியோர் இது குறித்து சாட்சியமளித்துள்ளதாகவும் பாதுகாப்பு பேரவைக்கு அதிகாரிகளை அழைத்து சுரேஷ் சலே தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்ததாகவும் விசாரணை அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.

ஒரு புலனாய்வு அதிகாரி எவ்வாறு பொலிஸ் மாஅதிபரை பாதுகாப்பு பேரவைக்கு அழைக்க முடியும் என நீதவான் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அது ஜனாதிபதியால் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு பேரவை கூட்டப்படுவதாகவும் அரச புலனாய்வு பணிப்பாளரின் சமர்ப்பணங்களுக்கு அமையவே அது முன்னெடுக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

விசாரணை அதிகாரியின் விளக்கம்
மேற்கோள் ஆரம்பம்

‘’

கௌரவ நீதவான் அவர்களே, இறுதியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பிரசாத் ரணசிங்க இது குறித்து தெரிவித்துள்ளார். சுரேஷ் சலே என்ற அதிகாரி இதனை தொடர்ச்சியாக செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் அதனை செய்யாத போது பாதுகாப்பு பேரவைக்கு அழைத்து ஜனாதிபதி ஊடாக தமக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இறுதியில் அவருக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தினால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்''

மேற்கோள் நிறைவு

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை முன்வைத்தார்.

சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் வாதம்

மேற்கோள் ஆரம்பம்

‘’இந்த குண்டுத் தாக்குதல் 2019ஆம் ஆண்டு இடம்பெற்றது. இப்போது கட்டுவாப்பிட்டிய அது இது என்று பேசி பயனில்லை. ஏனெனில் 2019-இல் இந்த 03ஆவது சந்தேகநபர் இலங்கையில் இருக்கவில்லை, அவர் மலேசியாவில் இருந்தார். சந்தேகநபர் பொலிஸ் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி.பி   ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறுகின்றனர். அவர்கள் அக்காலத்தில் கோட் அணிந்திருந்தார்களா? இந்த கதைகளை கேட்கவே வெட்கமாக இருக்கிறது. பாதுகாப்பு சபைக்கு அழைத்து திட்டியதாகக் கூறுகின்றனர். அரச புலனாய்வு சேவை பொலிஸ் மாஅதிபரின் கீழேயே இயங்குகிறது. மற்றொன்று இராணுவ அதிகாரி ஒருவரால் பாதுகாப்பு பேரவையில் கதைக்க முடியுமா? பாதுகாப்பு பேரவையை ஜனாதிபதியே கூட்ட வேண்டும். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தபோது பாதுகாப்பு பேரவை கூட்டப்பட்டிருக்கவில்லை. அந்த விடயங்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் 07 நீதியரசர்கள் அங்கம் வகித்த குழாம் முன்னிலையில் நடந்த வழக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன''

மேற்கோள் நிறைவு

அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பிரயோகித்த அழுத்தங்கள் என்னவென விசாரணை அதிகாரிகளிடம் நீதவான் வினவினார்.

விசாரணை அதிகாரியின் விளக்கம்
மேற்கோள் ஆரம்பம்

‘’கௌரவ நீதவான் அவர்களே, 03ஆவது தடவையாகவும் அம்பாறையில் உள்ள புதைகுழியை தோண்டி அதன் மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனை செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் தொடர்ச்சியாக புலனாய்வு மீளாய்வு கூட்டத்தின் போது இதனை கூறியும் செயற்படுத்தப்படாததால் பாதுகாப்பு பேரவைக்கு அழைத்து ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். இந்த CID-யில் உள்ளவர்கள் இதனை செய்வதில்லை. வேண்டுமென்றெ அதனை தவிர்க்கின்றனர் என கூறியுள்ளார்''

மேற்கோள் நிறைவு

இதேவேளை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை சந்திப்பதில் சட்டத்தரணிகளுக்கு பல்வேறு தடைகள் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.

நீதவானின் அறிவிப்பு
மேற்கோள் ஆரம்பம்

‘’மூன்றாவது சந்தேகநபர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடையவை. அவை கடமை தவறியமை போன்ற ஏனைய சாதாரண விடயங்கள் அல்ல. எனவே, முன்னைய உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. சாட்சிகள் போதுமானதா, இல்லையா என்பதை இன்று சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி சுருக்க அறிக்கை மற்றும் இனிவரும் விசாரணைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். எனினும், நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அந்த சாட்சியங்கள் குறித்த விடயங்கள் தேவையான நேரத்தில் பரிசீலிக்கப்படும். விசாரணை அதிகாரியால் 03ஆவது சந்தேகநபர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட 03 விடயங்களில் ஒன்று பாதுகாப்பு பேரவையுடன் தொடர்பானது. அங்கு அந்த உத்தரவைப் பிறப்பித்தது ஜனாதிபதி என்றால், பாதுகாப்பு பேரவையூடாக அவ்வாறு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் உள்ளதா என பார்க்க வேண்டும். அவ்வாறு அதிகாரம் இருக்கும் பட்சத்தில், அதனை ஒரு குற்றவியல் விடயமாகக் கருத முடியாது. விசாரணைகளை முடக்கும் நோக்கத்தில் அவ்வாறு செய்திருந்தால் மட்டுமே குற்றவியல் பொறுப்புக்கூறல் ஏற்படும். அவ்வாறன்றி, விசாரணையின் சில கட்டங்களுக்காக வழங்கப்பட்ட ஆலோசனையாக அது இருக்குமாயின், அதன்மூலம் மட்டும் குற்றவியல் பொறுப்பை சுமத்த முடியாது. இது குறித்த விடயங்களை மேலும் விசாரணை செய்ய வேண்டும். பாதுகாப்பு பேரவையில் நடந்த சம்பவம் குற்றவியல் பொறுப்பை சுமத்தக்கூடிய ஒரு விடயமா என ஆராய்ந்து, அது தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும். அவ்வாறு இருக்குமாயின், குற்றவியல் பொறுப்பு யாரை சேரும் அது எவ்வாறு சேரும் என்பது குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்கவும் அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தை அடுத்த தவணையில் சமர்ப்பிக்கவும்.

03ஆவது சந்தேகநபர் தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை முன்வைப்பதாக இருந்தால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்புகளின் அடிப்படையில் எதனை கோருகிறீர்கள் என்பதை எழுத்து மூலம் சமர்ப்பிக்கவும். அதன் பின்னர் அது குறித்து பரிசீலிக்கப்படும். அதற்கு மேலதிகமாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கவனம் செலுத்தி அதன் அரசியலமைப்பு எல்லைகளுக்கு உட்பட்டு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதற்கு மேலதிக தேவைகள் இருப்பின் அவை எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்''

மேற்கோள் நிறைவு