இந்தியா - கனடா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியா - கனடா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

by Staff Writer 02-03-2026 | 8:14 PM

Colombo (News 1st) அணு மின்சார உற்பத்திக்கான யுரேனியத்தை வழங்குவது தொடர்பில் இந்தியா மற்றும் கனடா இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அணு மின் உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை வழங்குவதற்கு கனடா இணங்கியுள்ளதுடன் அதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று கனேடியப் பிரதமர் மார்க் கார்னி கடந்த 27ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

இந்தநிலையில் இந்திய - கனேடிய பிரதமர்கள் இடையிலான சந்திப்பு இன்று(02) நடைபெற்றது.

இதன்போது இந்தியா - கனடா இடையேயான ஒத்துழைப்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், விவசாயம், கல்வி, உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தொடர்ந்து அணு மின் உற்பத்திக்கான யுரேனியத்தை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. 

இந்த ஒப்பந்தத்தின் கீழ் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான யுரேனியத்தை கனடா இந்தியாவிற்கு வழங்கவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கின்றார்.

மேலும் கனிம வள துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.