இலங்கை அகதிகளுக்கான அறிவித்தல்

இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் - இந்திய மத்திய உள்துறை அமைச்சு

by Staff Writer 09-09-2025 | 6:45 PM

Colombo (News 1st) இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

2015 ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்கு பிரவேசித்து அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கடந்த 3ஆம் திகதி செய்தி வௌியிட்டிருந்தன.

இலங்கை தமிழ் அகதிகள், செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகள், பயண ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படாது என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்னோடியான நீண்ட கால விசாக்கள் 01 முதல் 05 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வழங்கப்படுகின்றன.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டு அல்லது விசாக்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் பிரவேசித்தால் 11 ஆண்டுகள் தொடர்ந்து தங்கிய பிறகு நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதிமுறை காணப்படுகின்றது.

எனினும் இலங்கை தமிழர்கள் அதற்கு தகுதி பெற மாட்டார்கள் என ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.