Colombo (News 1st) இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார்.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
1962ஆம் ஆண்டில் டாடா குழுமத்தில் இணைந்த அவர் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், 1991ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில்துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்ம பூஷன், பத்ம விபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசின் உயரிய விருது, பிரித்தானிய அரசின் Honorary Knight Commander of the British Empire ஆகிய பட்டங்களையும் அவர் பெற்றிருந்தார்.
மறைந்த ரத்தன் டாடாவிற்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.