Colombo (News 1st) செப்டம்பர் மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை, எதிர்பார்த்ததை விட குறைவாகவே காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
விசா வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அதற்கு காரணமாக இருக்கலாம் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதத்திலிருந்து விசா விநியோகிக்கும் நிறுவனம் மாறியமையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதனைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டியிருந்ததுடன் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், 39 நாடுகளின் பிரஜைகளுக்காக விசா இன்றி சுற்றுலாவை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனூடாக 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை நெருங்க முடியும் எனவும் பிரியந்த பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.
செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 92,639 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.45 மில்லியனை கடந்துள்ளது.