Colombo (News1st) ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களை தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
தேர்தலில் 3 மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும் வேறு 2 வேட்பாளர்களுக்கு இரண்டாவது, மூன்றாவது விருப்ப தேர்வையும் வாக்குசீட்டில் அடையாளமிட முடியும்.
அவசியமெனில் வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கான வாய்ப்பும் உள்ளதென ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு எதிரில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் 01 என்ற இலக்கத்தை குறித்து வாக்கை அளிக்க முடியும்.
அதன் பின்னர் 02, 03 என்ற இலக்கங்களை குறிப்பதன் மூலம் தனது இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தெரிவுகளை அடையாளப்படுத்தலாம்.
வாக்குச்சீட்டொன்றில் வாக்காளர் தனது இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்புத் தெரிவுகளை அடையாளமிடாவிட்டாலும் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் அடையாளமிட்டிருந்தாலும் அது செல்லுபடியான வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
இவற்றை தவிர வாக்குச்சீட்டின் மீது இடப்பட்ட ஏதேனும் அடையாளமொன்றினால் தௌிவாக தெரியுமிடத்து அதாவது எக்ஸ் என மாத்திரம் அடையாளமிடப்படுமாயின் அது வாக்காளருக்கு அளிக்கப்பட்ட வாக்காக கருதப்படும்.
எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கு அடையாளமிடப்படாவிட்டாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்காக வாக்கு அடையாளமிடப்பட்டுள்ள போதிலும் வாக்குகள் நிராகரிகப்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஒரு வேட்பாளருக்கு ஒன்று மற்றும் மற்றுமொருவருக்கு எக்ஸ் அடையாளம் இடப்படுமாயின் அதுவும் நிராகரிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது விருப்புத் தெரிவு அல்லது மூன்றாவது விருப்புத் தெரிவு மாத்திரம் அடையாளமிமடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலும் வாக்குகள் நிராகரிக்கப்படும்.
வாக்காளரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய ஏதேனுமொன்று எழுதப்பட்டிருப்பின் அல்லது வரையப்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலும்
01 தவிர்ந்த வேறு அடையாளத்துடன் 2,3 விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலும் வாக்குகள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1,2,3 ஐ விட வாக்கு மற்றும் விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டால் வாக்கெண்ணப்படும் போது அவை நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.