WhatsApp-இல் வினாத்தாள் பகிர்வு

சாதாரண தர பரீட்சையின் போது WhatsApp-இல் வினாத்தாள் பகிரப்பட்டமை தொடர்பில் விசாரணை

by Bella Dalima 10-05-2024 | 3:17 PM

Colombo (News 1st) கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் நேற்று (09) இடம்பெற்ற ஆங்கிலப் பரீட்சை வினாத்தாள் WhatsApp ஊடாக பகிரப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. 

ஆங்கிலப் பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அந்த வினாத்தாள் WhatsApp ஊடாக பகிரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். 

பரீட்சார்த்திகள் சிலர் மோசடியான முறையில் விடை எழுதும் நோக்கில் இவ்வாறு வினாத்தாளை பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டினூடாக ஆங்கிலப் பாட வினாத்தாளின் இரகசியத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதனிடையே, சாதாரண தர பரீட்சையின் சிங்கள பாட வினாத்தாளில் குறைபாடு காணப்படுவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.