ரஃபா நகரை தாக்கினால் ஆயுத உதவிகளை நிறுத்துவோம்

ரஃபா நகரை தாக்கினால் ஆயுத உதவிகளை நிறுத்துவோம்: இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

by Bella Dalima 09-05-2024 | 3:26 PM

Colombo (News 1st) தெற்கு காஸாவின் ரஃபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால், ஆயுத உதவிகளை நிறுத்துவோம் என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஃபாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் தரைவழி தாக்குதலை நடத்தினால், அந்நாட்டுக்கு  ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கப் போவதில்லை என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். 

ரஃபாவின் தற்போதைய நிலைமையை தரைப்படை நடவடிக்கையாக அமெரிக்கா வரையறுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பலவற்றில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு உதவுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க பொலிஸார் களமிறங்கியுள்ளனர். இதனால், மாணவர்கள் ஒடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வௌியிட்டுள்ளன. 

பாலஸ்தீனத்தின் காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34,000-இற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 

இந்த தாக்குதலில் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகள் முற்றிலும் நிர்மூலமாகியுள்ளன. 

இதற்கிடையே, இலட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காஸாவின் ரஃபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து, ரஃபா எல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், அங்கு டாங்கிகளை குவித்துள்ளது.