மைத்திரிபால சிறிசேன தொடர்பான நீதிமன்ற உத்தரவு

மைத்திரிபால சிறிசேன SLFP தவிசாளராக செயற்படுவதை தடுக்கும் நீதிமன்ற உத்தரவு மேலும் நீடிப்பு

by Staff Writer 09-05-2024 | 1:07 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதான இன்று(09) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இடைக்கால தடையுத்தரவு தொடர்பான ஆட்சேபனையை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு மன்றினால் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன, சிரேஷ்ட உப தவிசாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, உப தவிசாளர் பைசர் முஸ்தபா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை கட்சியின் யாப்பிற்கு முரணாக அமைந்துள்ளதால் அவர் தவிசாளராக செயற்படுவதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.