முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வௌிநாடு செல்லத் தடை

by Bella Dalima 09-05-2024 | 4:27 PM

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வௌிநாடு செல்லத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சமூக செயற்பாட்டாளரான ஓஷல லக்மால் ஹேரத் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த பின்னர் அவர் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் போலியான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

டயானா கமகே வௌிநாடு செல்ல தடை விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கும் அரச புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

போலியான தகவல்களை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சந்தேகநபராக டயானா கமகேவை பெயரிட போதுமான விடயங்கள் காணப்பட்ட போதிலும் குற்றவியல் விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் அவரை சந்தேகநபராக பெயரிடாமையினால், அவர் வழக்கில் ஆஜராகாமல் வௌிநாட்டிற்கு தப்பிச்செல்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக நீதிமன்றத்திற்கு தெரிய வருவதால், இந்த உத்தரவை பிறப்பித்ததாக நீதவான் அறிவித்துள்ளார்.