சம்பள அதிகரிப்புகளை மேற்கொள்ளும் அளவிற்கு அரச வருமானம் இல்லை: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

by Bella Dalima 09-05-2024 | 8:00 PM

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டிற்கான சம்பள அதிகரிப்பு கோரிக்கைகள் வந்தாலும் அரச வருமானம் அதற்குத் தகுந்த வகையில் அதிகரிப்பை காண்பிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (09) தெரிவித்தார். 

கடந்த காலங்களில் பொறுப்பற்ற முறையில் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் அழித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் கடினமான பாதையில் தான் நாடு பயணிப்பதாக சுட்டிக்காட்டினார். 
 
பாராளுமன்ற அமர்வில் இன்று முற்பகல் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் மற்றும் நாட்டின் எதிர்கால பயணம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

 ''பற்றி எரிந்துகொண்டிருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாடு நரகமாக மாறியிருந்தது. பொருளாதாரம் முடங்கிக் கிடந்தது. பணவீக்கம் 70 சதவீதமாக உயர்ந்திருந்தது. மொத்த தேசிய உற்பத்தியில் 10-12 சதவீதத்திற்கும் அதிகமாக வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை அதிகரித்திருந்தது. வட்டி வீதம் 30 சதவீதமாக உயர்ந்திருந்தது. டொலரின் பெறுமதி சுமார் 450 ரூபா வரையில் அதிகரித்திருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியமாகிப் போனது. நாட்டில் பெரும்பகுதியானோர் வீதிகளில் இறங்கினர். பல நாட்களாக மக்கள் வரிசையில் நின்றனர். பல எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாட்டையும் பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். அத்தகைய ஆபத்தான சூழலிலேயே இந்தப் பணிகளை தோளில் ஏற்றுக்கொண்டேன். மூன்று காரணங்களுக்காகவே சவாலை ஏற்றுக்கொண்டேன். என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. அனுபவம் இருந்தது. சர்வதேச தொடர்புகள் இருந்தன. அதனால், நரகத்தில் வீழ்ந்த இந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையும் என்னிடம் இருந்தது,''

என தனது உரையின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தெரிவித்தார். 

பொருளாதார சவால்களை வென்றெடுத்த விதம் தொடர்பிலும் ஜனாதிபதி தௌிவுபடுத்தினார்.

இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறைந்தது 3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பணவீக்கம் தற்போது 1.5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

பல ஆண்டுகளாக பற்றாக்குறையாக இருந்த முதன்மை கணக்கு கையிருப்பு,  2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 % உபரியாக மாற்றப்பட்டதுடன், வட்டி விகிதம் 10-13 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டொலரின் பெறுமதியை 300 ரூபாவை விடவும் குறைவாகக் கொண்டு வர முடிந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. சவாலான, கடினமான, சரியான பாதையை பின்பற்றியதால், இந்த நிலையை அடைய முடிந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.