பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

by Staff Writer 07-05-2024 | 7:04 AM

Colombo (News 1st) சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொடர் பணிப்பகிஷ்கரிப்பு ஆறாவது நாளாக இன்றும்(07) தொடர்கிறது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான பிரச்சினைக்கான தீர்வுகளை கல்வி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்ததையடுத்து, அது தொடர்பான பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றும் சுகவீன விடுமுறையை அறிவித்து அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் சேவையிலிருந்து விலகி செயற்படவுள்ளதாக அதன் தலைவர் நந்தன ரணசிங்க குறிப்பிட்டார்.