சம்பள அதிகரிப்பிற்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் நீதிமன்றத்தை நாட தீர்மானம்

by Bella Dalima 02-05-2024 | 5:28 PM

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 
இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறை சாத்தியமற்றது என தெரிவித்து பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளது. 

தற்போதைய நிலைமையின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்க முடியாதென பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பை வழங்கினால், தேயிலை தொழிற்றுறை முற்றாக பாதிக்கப்படும் என சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை கூறினார்.

இந்த சம்பள அதிகரிப்பு உரத்திற்கு விதிக்கப்பட்ட தடையின் இரண்டாம் பாகமாக அமையும் எனவும் இதனால் ஏற்படுகின்ற தேயிலைத்துறையின் வீழ்ச்சிக்கு இந்த தீர்மனத்தை எடுத்தவர்களே பொறுப்புகூற  வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

25 அல்லது 30 கிலோகிராம் கொழுந்தை பறித்தால் மாத்திரமே சம்பள அதிகரிப்பு ஓரளவேனும்  சாத்தியப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம்  குறிப்பிட்டுள்ளது.

மேலதிகமாக பறிக்கப்படுகின்ற ஒரு கிலோகிராம் கொழுந்திற்கு 40 ரூபாவை செலுத்துவதே கடினமாகயுள்ள நிலையில், 80 ரூபாவை எவ்வாறு வழங்க முடியும் என ரொஷான் இராஜதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள 350 ரூபா விசேட கொடுப்பனவு என்பது என்னவென்பதே தமக்கு தெரியாது என  தெரிவித்த அவர், சம்பள அதிகரிப்பு தீர்மானத்தை நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்கு உட்படுத்த நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை வரவு செலவுத் திட்ட நிவாரண கொடுப்பனவை உள்ளடக்கியுள்ளதாகவும் இது ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதிய கொடுப்பனவிற்கும் ஏற்புடையது எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபா வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளாந்த மொத்த கொடுப்பனவு 1700 ரூபா வழங்கப்படும் எனவும் மேலதிக ஒரு கிலோவிற்கு 80 ரூபா வீதம் வழங்கப்படும் எனவும் விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச தீர்மானம் தொடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை சமர்ப்பிக்க முடியும் என தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.