Colombo (News 1st) இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தலா ஒரு கோடி இந்திய ரூபா மதிப்பிலான 11 மீன்பிடி படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்டுள்ள காரைக்காலை சேர்ந்த 11 மீனவப் படகுகளை மீட்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த படகுகள் தலா ஒரு கோடி இந்திய ரூபாவிற்கும் அதிக பெறுமதியானவை என்பதால், மீனவர் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் எதிர்பாராத வகையில் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை தலையீட்டின் மூலம் அவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ள போதிலும் காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே படகுகளை மீட்டு, காரைக்கால் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.