2000 ரூபா நாணயத்தாள்களை மீளப்பெறும் ரிசர்வ் வங்கி

2000 ரூபா நாணயத்தாள்களை மீளப்பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

by Bella Dalima 20-05-2023 | 5:10 PM

INDIA: 2000 ரூபா நாணயத்தாள்களை மீளப்பெறவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் 2,000 ரூபா நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளுமாறு அல்லது வங்கிகளில் வைப்பிலிடுமாறும் இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு  அறிவித்துள்ளது.

இம்மாதம் 23 ஆம் திகதியில் இருந்து 2000 ரூபா நாணயத்தாள்களை, குறைந்த பெறுமதியுடைய நாணயத்தாள்களாக மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒருவரால் ஒரே தடவையில் 20,000 ரூபாய்களை மாத்திரம் மாற்றிக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் பெறுமதியுடன் இருந்த 1000 ரூபா மற்றும் 500 ரூபா நாணயத்தாள்களை, பிரதமர் நரேந்திர மோடி ஒரே இரவில் மதிப்பிழக்கச் செய்ததன் பின்னர், 2000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.