by Staff Writer 21-12-2021 | 2:56 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
காரைநகர் பிரதேச சபை அமர்வு இன்று (21) தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் இடம்பெற்றது.
11 உறுப்பினர்களைக்கொண்ட காரைநகர் பிரதேச சபையில், குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு சுயேட்சை குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் என 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
அதனடிப்படையில், வரவு செலவுத் திட்டம் 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால், தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ளார்.
இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியை அப்போதைய தவிசாளர் உயிரிழந்ததால், கடந்த மாதம் 10 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் சுயேட்சைக் குழு வசமானது.
பின்னர் புதிய தவிசாளரால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 8 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
வரவு செலவுத் திட்டம் தேற்கடிக்கப்பட்டமையினால், திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.