.webp)
-556773.jpg)
Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(09) 16 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்தது.
04 வழக்குகளின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதியமைச்சருக்கு 72 வருட சிறைத்தண்டனையை விதித்ததுடன் அதனை ஒரே தடவையில் 16 வருடங்களில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டார்.
இதற்கு மேலதிகமாக இந்த 04 வழக்குகளுக்கும் சரண குணவர்தன 18 இலட்சம் ரூபா அபராதப் பணத்தையும் செலுத்த வேண்டும்.
2006ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, அந்நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சரண குணவர்தனவிற்கு எதிராக குறித்த 04 வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தது.
2022ஆம் ஆண்டின் 1954ஆம் இலக்க இலஞ்ச அல்லது ஊழல் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இந்த 04 வழக்குகளுக்கும் தொடர்புடைய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
முதலாவது வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவித்த நீதவான், பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாக அறித்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால்
மேற்கோள் ஆரம்பம்அந்த 03 வாகனங்களையும் கொள்வனவு செய்வதற்கான முற்பணமாக ஒரு சந்தர்ப்பத்தில் 15,60,000 ரூபாவும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் 15,21,000 ரூபாவும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் 9,60,000 ரூபாவும் அபிவிருத்தி லொத்தர் சபையின் நிதியைப் பயன்படுத்தி, பிறிதொரு தரப்பினருக்கு சாதகமான நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செலுத்துவதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவரின் இந்த செயல் காரணமாக அரசாங்கத்திற்கு நட்டமும் ஏற்பட்டுள்ளது.
மேற்கோள் நிறைவு
குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 303ஆவது பிரிவின் கீழ் இலகுவான தண்டனை தீர்ப்பை வழங்குமாறு இதன்போது சரண குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரஞ்சன் சில்வா கோரினார்.
சட்டத்தரணி ரஞ்சன் சில்வா
மேற்கோள் ஆரம்பம்
கௌரவ நீதவான் அவர்களே, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு இலகுவான தண்டனையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் 62 வயதான ஒருவராவார். அவர் இருதய நோயாளி என்பதுடன் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் அரசியலுக்கு வரும் எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கவில்லை. தற்போது வர்த்தகராகவே செயற்பட்டு வருகின்றார்
மேற்கோள் நிறைவு
சமூகத்திற்கு முன்மாதிரியாக அமையும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான உதவிப் பணிப்பாளர் நாயகம் அசித அந்தனி கேட்டுக் கொண்டார்.
அசித அந்தனி - உதவிப் பணிப்பாளர் நாயகம்,
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு
மேற்கோள் ஆரம்பம்
கௌரவ நீதவான் அவர்களே, இது ஊழல் நடவடிக்கை சார்ந்த குற்றமாகும். அரச நிறுவனங்களில் பணியாற்றும் அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் இவ்வாறான ஊழல் நடவடிக்கைகள், அண்மைக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கும் வங்குரோத்து நிலைமைக்கும் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக மக்கள் எரிவாயு வரிசைகளிலும் எரிபொருள் வரிசைகளிலும் நிற்க வேண்டியேற்பட்டது. பொதுமக்களின் பணத்தை பொறுப்பில் வைத்திருக்கும் அரச அதிகாரிகள், பொதுப் பணத்தை பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர். ஆனால், இந்த பிரதிவாதி ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு புறம்பான செயல்களை செய்யுமாறு அரச அதிகாரிகளைத் தூண்டியுள்ளார். இவ்வாறான சிறியதொரு குழுவினர் செய்யும் ஊழல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த நாட்டையும் இறுதியில் பாதிக்கின்றது. எனவே, இவ்வாறான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக அமையும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்
மேற்கோள் நிறைவு
விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள பின்னணியில் குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 303ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதிக்கு இலகுவான சிறைத்தண்டனையை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்மானிக்கவில்லை என்பதை வலியுறுத்தினார்.
மேல் நீதிமன்ற நீதியரசர் மொஹமட் மிஹால்
மேற்கோள் ஆரம்பம்
அரச நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மேற்கொள்ளும் ஊழல் நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் இந்த ஊழல் நடவடிக்கைகள் காரணமாக அரச நிறுவனங்கள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், பிரதிவாதிக்கான தண்டனையை குறைக்க முடியாது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக உள்ள குற்றத்தின் தன்மையைக் கருத்திற்கொண்டு, அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகளை இல்லாமல் செய்யும் வகையிலான தண்டனையை வழங்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் தீர்மானமாகும். அதற்கமைய, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான முதலாவது வழக்கின் 6 குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக தலா 04 வருடங்கள் வீதம் சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. அந்த சிறைத்தண்டனையை ஒரே தடவையில் அனுபவித்து முடிக்குமாறும் உத்தரவிடப்படுகின்றது. ஒரு குற்றச்சாட்டிற்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 6 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படுகின்றது
மேற்கோள் நிறைவு
இவ்வாறான குற்றச்சாட்டுகளின் கீழ் ஏனைய 03 வழக்குகளை சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்திருந்தது.
அதற்கமைய, அந்த 03 வழக்குகளிலும் சரண குணவர்தனவை குற்றவாளியாக நிரூபித்து நீதிபதி தண்டனை தீர்ப்புகளை வெளியிட்டார்.
நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பின் பிரகாரம், சரண குணவர்தன வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் அழைத்துச் செல்லப்பட்டார்.
