அமெரிக்க யோசனையை நிராகரித்த ஈரான்

அமெரிக்காவின் 48 மணித்தியால போர் நிறுத்த யோசனையை நிராகரித்த ஈரான்

by Staff Writer 04-04-2026 | 7:19 PM

Colombo (News 1st) அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 48 மணித்தியால போர் நிறுத்த யோசனையை ஈரான் நிராகரித்துள்ளது.

ஈரானிடம் ஏப்ரல் முதலாம் திகதி 48 மணித்தியால போர் நிறுத்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தொடர்ந்தே அமெரிக்கா இந்தத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை  நிராகரித்துள்ளதாகவும் அமெரிக்க இலக்குகள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தங்களின் போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் ஈரானுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் தாக்கம் செலுத்தாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க போர் விமானம் வீழ்த்தப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஊடகமொன்று ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு ஈரான் வான்வழி எல்லையில் பறந்த அமெரிக்க  விமானமொன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

US F-15 E வகை போர் விமானமொன்றே நேற்று(03) ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த விமானப் பணியாளர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாவது விமானப் பணியாளரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மீட்பு பணியில் 2 ஹெலிகாப்டர்களும் A-10 விமானமும் ஈடுப்பட்டிருந்தன.

F-15 விமானத்திலிருந்து மீட்கப்பட்ட விமானியை ஏற்றிச்சென்ற ஒரு ஹெலிகாப்டர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த விமானப் பணியாளர்கள் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.