'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு இன்று ஆரம்பம்

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

by Staff Writer 30-10-2025 | 7:12 AM

Colombo (News 1st) போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(30) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் காலை 10 மணிக்கு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களை தௌிவுபடுத்தும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க இயன்ற போதிலும் நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், வினைத்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மாத்திரமின்றி பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பிரசார திட்டத்தை செயற்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பு குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட வீழ்ச்சியடையச் செய்து  நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாக ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்தார்.

கடந்த காலங்களில் அரசியல் நிழலின் கீழ் சுதந்திரமாக வளர்ந்த இந்த குற்றங்கள், தற்போது நாட்டையும் சமூகத்தையும் கடுமையாக ஆக்கிரமித்துள்ளது என்பதையும் அதற்கு பொலிஸ், சுங்கம், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு எதிர்கால சந்ததியினருக்காக இந்த தேசிய பேரழிவை தோற்கடிப்பதற்கு அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள மறுக்க முடியாத பொறுப்பை ஜனாதிபதி குறித்த கலந்துரையாடலில் மேலும் வலியுறுத்தினார்.