Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஊழல் மோசடியாளர்களுக்கு எதிரான அமெரிக்காவின் முயற்சிகளுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊழலுக்கு எதிரான தினம், மனித உரிமைகள் தினத்திற்கு இணையாக உலகம் முழுவதுமுள்ள ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதற்கமைய, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தால் அதிக விலைக்கு எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்துவதற்காக இலஞ்சம் பெற்றதாக கபில சந்திரசேன மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்கான மிக் விமான கொள்வனவில் ஊழலில் ஈடுபட்டதாக உதயங்க வீரதுங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளால் அமெரிக்க அரச ஒதுக்கீட்டு திணைக்கள சட்டத்தின் 7031(C) சரத்தின் கீழ் குறித்த நபர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள மேலும் 12 பேருக்கு எதிராகவும் அமெரிக்கா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.