Colombo (News 1st) அரசியல் காரணங்களுக்காக தமது கணவர் விஜய குமாரதுங்கவை கொலை செய்ததை போன்று, தம்மையும் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனது பாதுகாப்பு தரப்பினரை 50 இலிருந்து 30ஆக குறைப்பதாக கடந்த 31ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ஹேமசிறி கடிதம் மூலம் தமக்கு அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243 மற்றும் 200 மற்றும் 109 பாதுகாப்பு குழுக்கள் வழங்கப்படுவதாகவும் எந்த அளவுகோலின்படி தமக்கு 30 பேரை மாத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது என்பது புதிராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற 5 ஜனாதிபதிகளில் தமக்கே கூடுதல் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் கொலை முயற்சிக்கு உள்ளாகி காயமடைந்த ஜனாதிபதியும் தாமே எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றிருந்தாலும் தமக்கு LTTE அமைப்பினால் 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவின் அறிக்கையூடாக தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பொதுமக்கள் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி தீர்மானங்கள் முன்னெடுக்கபடவுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டார்.