.webp)
Colombo (News 1st) வடக்கின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான வருடாந்த கிரிக்கெட் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
117 ஆவது வடக்கின் பெருஞ்சமரின் மூன்றாம் நாள் ஆட்டம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (09) காலை ஆரம்பமானது.
இரண்டாம் இனிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி நேற்றைய இரண்டாம் நாள் நிறைவடையும் போது 09 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியை விட 69 ஓட்டங்களால் முன்னிலை வகித்த யாழ். மத்திய கல்லூரி தனது இரண்டாவது இன்னிங்ஸை இன்று தொடர்ந்தது.
சற்று சவால்மிக்க முன்னிலை ஒன்றை எதிரணிக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்த போதிலும் யாழ். மத்திய கல்லூரி அணியால் 57.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
யாழ். மத்திய கல்லூரி அணியின் பின்வரிசை துடுப்பாட்டத்தில் விக்னேஸ்வரன் பருதி அதிகபட்சமாக 20 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.
சென். ஜோன்ஸ் கல்லூரியின் கிருபானந்தன் கஜகர்ணன், ஜெயச்சந்திரன் அஷ்னாத் மற்றும் ஸ்டான்லி சம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
79 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.
போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உதயாணன் அபிஜோய்ஷாந்த் 10 பௌண்டரிகள் அடங்கலாக 49 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்றார்.
அன்டர்ஸன் சச்சின் கணபதி விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றிருந்தார்
சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ். மத்திய கல்லூரியின் சகாதேவன் சயந்தன் தெரிவானார்.
சிறந்த பந்துவீச்சாளர் விருது சென். ஜோன்ஸ் அணியின் அருள்சீலன் கவிஷனுக்கு கிட்டியது.
சிறந்த களத்தடுப்பாளராக சென்.ஜோன்ஸ் அணியின் ஜெயச்சந்திரன் அஷ்னாத் தெரிவானார்.
சிறந்த சகலதுறை வீரர் விருது சென்.ஜோன்ஸ் அணித் தலைவர் நேசகுமார் எபநேசர் ஜெஸாயல் வசமானது.
சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதை சென்.ஜோன்ஸ் அணியின் சங்கீத் கிரீன்ஸ்மித் தன்வசப்படுத்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக சென். ஜோன்ஸ் கல்லூரியின் உதயாணன் அபிஜோய்ஷாந்த் தெரிவு செய்யப்பட்டார்.