.webp)
117 ஆவது வடக்கின் பெருஞ்சமரில் யாழ். மத்திய கல்லூரி அணி 69 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரி அணி 157 ஓட்டங்களை நேற்றைய முதல் நாளில் பெற்றது.
பதிலளித்தாடிய சென். ஜோன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களுடன் இன்றைய இரண்டாம் நாளில் ஆட்டத்தை தொடர்ந்தது.
அணித்தலைவர் நேசகுமார் எபநேசர் 52 ஓட்டங்களையும் அன்டர்சன் சச்சின் கணபதி 40 ஓட்டங்களையும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உதயாணன் அபிஜோய்சாந்த் 39 ஓட்டங்களையும் பெற்று அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தனர்.
இன்றைய தினம் மதியபோசன இடைவேளையின் பின்னர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சென். ஜோன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் தகுதாஸ் அபிலாஷ் 8 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் முரளி திசோன் 24.4 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் சுதர்சன் அனுஷாந்த் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
71 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து சிரமத்திற்குள்ளானது.
எனினும், நிஷாந்தன் அஜய் 23 ஓட்டங்களையும் சதாகரன் சிமில்டன் 21 ஓட்டங்களையும் பெற்று அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
யாழ். மத்திய கல்லூரி அணி 9 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்குவந்தது.
கிருபானந்தன் கஜகரன், ஜெயச்சந்திரன் அசாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி 69 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளதுடன் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் ஒன்றாக நாளைய மூன்றாம் நாள் ஆட்டம் மாறியுள்ளது.