வடக்கின் பெருஞ் சமரில் சென்.ஜோன்ஸ் ஆதிக்கம்

117ஆவது வடக்கின் பெருஞ் சமர் - முதல் நாளில் சென்.ஜோன்ஸ் ஆதிக்கம்

by Rajalingam Thrisanno 07-03-2024 | 7:17 PM

வடக்கின் பெருஞ் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 117 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமானது. 

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மத்திய கல்லூரி அணித்தலைர் நிஷாந்தன் அஜய் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். 

ஆட்டத்தை ஆரம்பித்த மத்திய கல்லூரி அணி மதிய போசன இடைவேளையின் போது 24 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

சிறப்பாகத் துடுபெடுத்தாடிய சகாதேவன் சயந்தன் 55 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். 

ரஜித்குமார் நியூட்டன் 24 ஓட்டங்களையும் சதாகரன் சிமில்டன் 22 ஓட்டங்களையும் பெற்றனர். 

மத்திய கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் 157 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. 

நேசகுமார் எபநேசர் தலைமையிலான சென். ஜோன்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய அருள்சீலன் கவிசான் 13 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

குகதாஸ் மாதுலன் 3 விக்கெட்டுகளையும் மர்பின் ரன்ட்யோ, மஹேந்திரன் கிந்துஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

ஆட்டத்தின் முதல் நாளான இன்று பிற்பகலில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் அணிக்கு உதயாணன் அபிஜோய்சாந்த் 40 ஓட்டங்களையும் அன்டர்சன் சச்சின் கணபதி 35 ஓட்டங்களையும் பெற்று சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர். 

மஹேந்திரன் கிந்துஷன் ஓட்டங்களைப் பெற்றார். 

சென் .ஜோன்ஸ் அணி 36 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் 109 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது 2ஆவது விக்கெட்டை இழந்தது. 

அத்துடன், இன்றைய முதல் நாள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடுவர்கள் தீர்மானித்தனர்.

சுதர்சன் அனுசாந்த், முரளி திசோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

3 நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளதுடன் முதல் இன்னிங்ஸில் மத்திய கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு சென். ஜோன்ஸ் அணிக்கு மேலும் 48 ஓட்டங்களே தேவைப்படுகின்றது. 

117 வருட வரலாற்றைக் கொண்ட வடக்கின் பெருஞ் சமரில் சென்.ஜோன்ஸ் 38 வெற்றிகளையும் யாழ். மத்திய கல்லூரி அணி 29 வெற்றிகளையும் பெற்றுள்ளதுடன் 41 போட்டிகள் வெற்றி - தோல்வியின்றி முடிந்துள்ளன. 

ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளதுடன் 7 போட்டிகள் தொடர்பான முடிவுகளின் தரவுகள் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.