by Staff Writer 09-09-2020 | 6:08 PM
Colombo (News 1st) COVID-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12
அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் எஸ்.துரைராஜா முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல், தொற்றுநோய் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தொற்றுநோய்களால் மரணிப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு இருக்கின்ற நிலையில், கொரோனாவினால் உயிரிழந்தவரின் உடல் தகனம் செய்யப்பட வேண்டுமென திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானியில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
COVID-19 வைரஸினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியுமென வர்த்தமானியை மீளத் திருத்தி வெளியிட உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
எனினும், இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் சிலர் அந்தப் பதவிகளை வகிக்காமையினால், பிரதிவாதிகளின் பெயர்களை மாற்றுவதற்கு இடமளிக்குமாறும் புதிய பிரதிவாதிகளாக பெயரிடப்படுவோருக்கு அறிவித்தல் விடுக்க அனுமதியளிக்குமாறும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அனுமதியளித்த நீதியரசர்கள், மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.